search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி தேர்தலில் போட்டியிடலாம் - லாகூர் ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    X

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி தேர்தலில் போட்டியிடலாம் - லாகூர் ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. #Abbasi #Pakistan
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிட லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. அவர் மீது தேர்தல் தீர்ப்பாயம் பிறப்பித்த தடை ரத்து செய்யப்பட்டது.

    பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிற பாகிஸ்தானில் வரும் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி என 3 கட்சிகள் இடையேயும் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரத்தில் அனல் வீசுகிறது.

    இந்த நிலையில், ராவல்பிண்டி-1 (என்.ஏ. 57) தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமர் அப்பாசி (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் அவர் நேர்மையானவர் அல்ல, மதிநுட்பம் மிகுந்தவர் அல்ல என்று கூறி வாழ்நாள் தடை விதித்து, அவர் ராவல்பிண்டி-1 தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதித்து பஞ்சாப் மாகாண தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பாசி, லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டின் மீது நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது.

    இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொகுதி தேர்தல் அதிகாரி தனது பதில் மனுவை நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வியிடம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் விசாரணையின்போது, அப்பாசி சார்பில் ஆஜரான வக்கீல், “வேட்பு மனுவில் கேட்கப்பட்டு உள்ள எல்லா கேள்விகளுக்கும் அப்பாசி பதில் அளித்து உள்ளார். அப்படி இருந்தும், சட்டத்துக்கு முரணாக அவருக்கு எதிராக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் அவர் தந்து உள்ளார்” என்று கூறினார்.

    மேலும், “தேர்தல் தீர்ப்பாயம் தனது வரம்பை மீறி உள்ளது, ஒன்று வேட்பு மனுவை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அதற்குத்தான் தேர்தல் தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறது. வாழ்நாள் தடை விதிக்க அதிகாரம் இல்லை” என்றும் அவர் வாதிட்டார். முடிவில் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து, அப்பாசி ராவல்பிண்டி-1 தொகுதியில் இருந்து போட்டியிட அனுமதி அளித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதே போன்று இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் ஜீலம் (என்.ஏ. 67) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த பவாத் சவுத்ரிக்கும் பஞ்சாப் தேர்தல் தீர்ப்பாயம் வாழ்நாள் தடை விதித்து இருந்தது. அவரும் லாகூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கும் நீதிபதி மஜாகிர் அலி அக்பர் நக்வி தலைமையில் 2 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இரு தரப்பு வாதத்துக்கு பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அவர் ஜீலம் தொகுதியில் போட்டியிட அனுமதியும் அளித்தனர்.  #Abbasi #Pakistan #tamilnews
    Next Story
    ×