search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பாவில் இனி உற்பத்தி - டிரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஹார்லி டேவிட்சன்
    X

    ஐரோப்பாவில் இனி உற்பத்தி - டிரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஹார்லி டேவிட்சன்

    ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஐரோப்பாவில் இனி உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. #Trump #HarleyDavison
    வாஷிங்டன்:

    அமெரிக்க தயாரிப்பு பொருட்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்கள் பலவற்றுக்கு வரியை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்தது. அலுமினியம் மற்றும் ஸ்டீஸ் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப்பின் நடவடிக்கை கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை கொடுத்தது.

    இதனால், போட்டிக்கு போட்டியாக அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான வரியை  சீனா உயர்த்தியது. இதனால், வணிக யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால், முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. 

    இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×