என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது பட்ஜெட் 2018: இறக்குமதி ஸ்மார்ட்போன்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு ஏன்?
    X

    பொது பட்ஜெட் 2018: இறக்குமதி ஸ்மார்ட்போன்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு ஏன்?

    இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மற்றும் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று (பிப்.-1) தாக்கல் செய்தார். பொது பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், உதிரிபாகங்கள் மற்றும் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சுங்க வரியை அதிகரிப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது. 

    அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன் மற்றும் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி 15% இல் இருந்து 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சுங்க வரி 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

    2014-ம் ஆண்டில் இறக்குமதி மொபைல் போன்களுக்கான சுங்க வரி 6% ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10% ஆகவும், டிசம்பரில் 15% ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் 5% கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை துவங்காத ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஐபோன் எஸ்.இ. தவிர மற்ற ஐபோன் மாடல்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சுங்க வரி 10% இல் இருந்து 15% ஆக உயர்த்திய போதே ஐபோன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



    இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி உயர்த்தியதன் மூலம் உள்நாட்டில் தொழிற்சாலைகளை மொபைல் நிறுவனங்கள் தொடங்கும். இதனால், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். மேலும் இந்திய பொருட்களின் விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விட குறைவாக இருக்கும். இந்திய பொருட்கள் விலை குறையும் போது விற்பனை வெகுவாக அதிகரிக்கும். 

    இதனால் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தயாரிப்பு ஆலைகளை துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருப்பதால் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. 

    சர்கியூட் போர்டு, கேமரா மாட்யூல்கள் மற்றும் கனெக்டர் போன்ற சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது 15% சுங்க வரி செலுத்த வேண்டும் என்பதால், உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஸ்மார்ட்போன் உருவாக்கும் நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×