என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலில் வட கொரியாவுக்கு தொடர்பிருக்கலாம்: இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் தகவல்
    X

    ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலில் வட கொரியாவுக்கு தொடர்பிருக்கலாம்: இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் தகவல்

    உலகின் சுமார் 150-க்கும் அதிகமான நாடுகளில் நடந்த ரான்சம்வேர் தாக்குதலில் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என இந்திய வம்சாவெளி ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் பாதிப்பினால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

    உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள ரான்சம்வேர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ரான்சம்வேர் சைபர் குற்றவாளிகள் வட கொரியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூகுளில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    அதன்படி வடகொரியர்கள் சார்பில் இயங்கி வரும் லசாரஸ் குரூப் புதிய ரான்சம்வேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் ஆராய்ச்சியாளரான நீல் மேத்தா தெரிவித்துள்ளார். 



    ஏற்கெனவே நடத்தப்பட்ட வானாகிரிப்ட் (WannaCrypt) தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கோடிங் தான் இம்முறை நடத்தப்பட்டுள்ள வானாகிரை (WannaCry) தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரு தாக்குதல்களிலும் ஒரே மாதிரியான மென்பொருள் தான் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    சீனாவை சேர்ந்த லசாரஸ் குரூப், முன்னதாக 2014 ஆம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் மற்றும் 2016-இல் வங்கதேசத்தை சேர்ந்த வங்கியை ஹேக் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 



    எனினும் கேஸ்பர்ஸை லேப் வெளியிட்டுள்ள தகவல்களின் படி வானாகிரிப்ட் தாக்குதலின் முந்தைய பதிப்புகளை நன்கு ஆய்வு செய்த பின்னரே, ஹேக்கிங் செய்த குழு சார்ந்த தகவல்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உலகின் மற்ற ஆராய்ச்சியாளர்களும் தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரத்தை வழங்க வேண்டும் என கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

    சோனி பிக்சர்ஸ் ஹேக் சார்ந்து வடகொரியா எவ்வித தகவலையும் வெளியிடாத போதும், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்டவை வடகொரியாவிற்கு தொடர்புண்டு என்பதையே தெரிவித்தன. 

    இந்த தாக்குதல் பார்க்க வடகொரியாவை சேர்ந்தவர்களின் செயலாக தெரியும்படி கைதேர்ந்த ஹேக்கர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×