என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழை பெய்தால் தண்ணீர் முதல் மாடி வரை வரும்- பெரும்பாக்கத்துல வாழ்றது பெரிய கஷ்டம்
- இந்த பகுதி கிராம பஞ்சாயத்து பகுதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
- கடந்த 2021-ம் ஆண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடி தான்.
சென்னையில் அதுவும் குறிப்பாக பெரும்பாக்கத்தில் வாழ்றதுன்னா ரொம்ப பெரிய கஷ்டந்தாங்க என்பது தான் அந்த பகுதி வாசிகள் சாதாரணமாக சொல்வது.
ஒரு காலத்தில் நீர் நிலைகள், வயல்வெளிகள், முள்காடுகளாக இருந்த பெரும்பாக்கம் இப்போது பெரும் நகரமாக வளர்ச்சி கண்டுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை. அதே நேரம் மக்கள் சிரமமில்லாமல் வாழத் தகுதியான இடமாக அந்த பகுதி மாறவில்லை என்பது தான் எல்லோரது ஆதங்கமும்.
சென்னையில் பெருமழை கொட்டினால் பெரும்பாக்கத்தில் வீடுகளில் முதல் தளம் வரை மழை வெள்ளம் சூழ்ந்து விடுவது வழக்கமாயிற்று. அந்த 3 மாத காலமும் பெரும்பாக்கம் வாசிகள் பெரும் துயரை சந்தித்து தான் ஆக வேண்டும். கார்கள், டூவீலர்களை பள்ளிக்கரணை மேம்பாலத்தில் கொண்டு நிறுத்தி பாதுகாத்த சம்பவங்களும் நடந்துள்ளது.
பெரும்பாக்கத்தின் இந்த அவல நிலை இன்னும் மாறாமல் இருக்க காரணம் சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு இடையே சிக்கி உள்ள இந்த பகுதி கிராம பஞ்சாயத்து பகுதியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து பகுதியாக இருப்பதால் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகள் எதுவும் இல்லை. குடிநீருக்கு தனியார் லாரிகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். இதனால் மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆவதாக கூறுகிறார்கள்.
மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புகள், பெரிய ஆஸ்பத்திரிகள் இருந்தும் பஞ்சாயத்து என்ற அடையாளத்தால் போதுமான நிதி கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடி தான்.
அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாகி பரிதாபமாக காட்சி அளிக்கின்றன. 10 வார்டுகளை கொண்ட சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்க ரூ.750 கோடி ஒதுக்கியது. 10 வார்டுகளை கொண்ட இந்த மண்டலத்தில் இருந்து ஆண்டு வருவாய் ரூ.82 கோடி கிடைக்கிறது. ஆனால் ஒரு வார்டு அளவு பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் இருந்து ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் வளர்ச்சி பணிகளுக்கு அதைவிட குறைவாகவே ஒதுக்கப்படுகிறது.
பெரும்பாக்கம் பஞ்சாயத்து பகுதியில் 485 சாலைகள் உள்ளன. இதில் 319 சாலைகள் படுமோசமாக உள்ளன. இந்த சாலைகளை ரூ.34 கோடி செலவில் சீரமைக்க திட்டமிட்டு உள்ளார்கள். மழைக்காலத்துக்கு பிறகு இந்த பணிகள் தொடங்குமாம்.
ஆனால் சீரமைக்கும் சாலைகள் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் என்பதே இந்த பகுதி மக்கள் எழுப்பும் கேள்வி.
2015 மற்றும் 2023-ல் பெருவெள்ளத்தின் போது முதல் தளம் வரை தண்ணீர் சென்றது. ஆனால் அதன் பிறகு நீர்வளத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த பகுதி மக்களின் மனக்குறையாக உள்ளது.
3.34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரும்பாக்கம் பஞ்சாயத்தின் மக்கள் தொகை சுமார் 30 ஆயிரம். 146 தெரு விளக்குகள் உள்ளன. அதிலும் பல விளக்குகள் எரியவில்லை. காந்தி நகர், மூகாம்பிகை நகர், கைலாஷ்நகரில் கடந்த 2015 முதல் ஒவ்வொரு பெருமழையிலும் முதல் தளம் வரை மழை வெள்ளம் புகுந்தது. ஆனால் அதை தடுப்பதற்கான எந்த முன்னேற்பாடும் இதுவரை மேற்கொள்ளவில்லை.






