என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லையில் நேற்று நடந்தது சம்பவம் அல்ல: 2026-ல் நாங்கள் செய்யப்போவது தான் சம்பவம்'- சீமான்
- அரசு மருத்துவர்கள் மக்களிடத்தில் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
- மாநில அரசு போதைப் பொருளை தடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது நிர்வாகிகள் சிலருக்கிடையே திடீரென வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்ட நிலையில் நிர்வாகிகள் சிலர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது நெல்லை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சீமான் பதிலளிக்கும் போது, நேற்று நெல்லையில் நடந்தது. சம்பவம் அல்ல, நாங்கள் 2026-ல் செய்யப்போவது தான் சம்பவம் என்றார். தொடர்ந்து சீமான் கூறியதாவது:-
அரசு மருத்துவர்கள் மக்களிடத்தில் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும். நாம் அவர்கள் மீது பெருமதிப்பு வைத்துள்ளோம். மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அரசு மருத்துவமனைகளில் துணை காவல் நிலையம் போல் அமைத்து காவலர்களை பணியில் வைக்க வேண்டும்.
தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் எல்லா போதைப் பொருளும் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கிடைக்கிறது. மாநில அரசு போதைப் பொருளை தடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதில் மனது முழுவதும் கோபம் இருக்கிறது. ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். தமிழக மீனவர்களை தொட்டுவிட்டால் என்னை கேளுங்கள் என்றார்.
தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், பேசுவதை எல்லாம் குற்றம் என்று கைது செய்யக்கூடாது. வருத்தம் தெரிவித்து விட்டால் விட்டுவிடலாம். அதை பெரிய குற்றமாக நான் கருதவில்லை. இது அரசியல் பழிவாங்கலாக நடக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்துடன் நேற்று அரசு விழாவில் கலந்து கொண்டது குறித்து கேட்கிறீர்கள் இது அவர்கள் ஆட்சி. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள். அரசு விழாவில் அவர்கள் அடையாளத்துடன் வருவதை ஒன்றும் செய்ய முடியாது. அதை நாம் கண்டிக்கிறோம். ஒன்றும் செய்ய முடியாது. அடுத்த முறையும் அதேயே தான் அவர்கள் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






