என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் என்ன? - பதில் அளிக்க போலீசார் உத்தரவு
- மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள், பேனர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- உணவு வினியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை:
த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த (ஆகஸ்டு) மாதம் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கான கால்கோள் விழா கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்றைய தினமே மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி வேண்டியும், உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் மனு வழங்கினார். அந்த மனுவில், மாநாடு தொடர்பான மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் த.வெ.க. நடத்தும் மாநாடு தொடர்பாக பல்வேறு விபரங்களை அளிக்குமாறு அந்த கட்சிக்கு மதுரை மாவட்ட காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி மாநாடு நடைபெறும் இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? மாநாடு தொடங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரம், மாநாட்டு மேடையில் எத்தனை இருக்கைகள் போடப்படுகிறது? தொண்டர்கள் அமருவதற்காக எத்தனை நாற்காலிகள் கொண்டு வரப்படும்?
மாநாட்டு திடலில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவுகள், பேனர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள்? என்ற தோராயமான எண்ணிக்கை, மாநாடு நடைபெறும் இடத்தில் நிறைவேற்றப்பட உள்ள அடிப்படை வசதிகள் குறித்த விபரங்கள், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளது? உணவு வினியோகம் உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவில் மதுரை மாவட்ட போலீசாருக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.






