என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக விஜய் கோவை பயணம்
- விஜய் கலந்து கொள்ளும் மாநாட்டில் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
- அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது.
கோவை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
ஒருபக்கம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் தேர்தல் சமயத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் பலமே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் அதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். இதில் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு கோவையில் நாளை (26-ந் தேதி) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. சரவணம்பட்டி பகுதியில் எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டில் மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். 2 நாட்களும் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை நடக்கிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். காலை 11 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வந்து சேருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
விஜய் கலந்து கொள்ளும் மாநாட்டில் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்காக முகவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள் விஜயை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக விஜயை காண விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகளும், விஜயை வரவேற்க விமான நிலையத்துக்கு திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக கோவை வருவதால் விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
வரவேற்புக்கு பின் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று விஜய் ஓய்வெடுக்கிறார். பின்னர் காரில் புறப்பட்டு மாநாடு நடைபெறும் எஸ்.என்.எஸ். கல்லூரிக்கு செல்கிறார். அங்கு வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதன்பின் மீண்டும் ஓட்டலுக்கு செல்கிறார். மறுநாள் காலை கொங்கு மண்டல முக்கிய நிர்வாகிகள் சிலரை சந்தித்து ஆலோசிக்கிறார். மாலையில் மீண்டும் 2-வது நாள் மாநாட்டில் பங்கேற்கிறார். அன்று இரவே அவர் சென்னை திரும்பவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கவனித்து வருகிறார். இதற்காக அவர் கடந்த 3 நாட்களாக கோவையிலேயே முகாமிட்டு பணிகளை கவனித்து வருகிறார். இன்றும் அவர் மாநாடு அரங்கிற்கு சென்று பணிகளை விரைவுப்படுத்தினார்.






