என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் நுழைய தடை: பிரசார வாகனத்தில் நாகை வந்தடைந்தார் விஜய்
    X

    திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் நுழைய தடை: பிரசார வாகனத்தில் நாகை வந்தடைந்தார் விஜய்

    • விஜய் இரண்டாம் கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது.
    • விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் அவரது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியது.

    இதில் அவரை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட காரணத்தினால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை 7 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 5 மணி நேரம் ஆனது. வழி நெடுகிலும் பிரசார வாகனத்தை பல்லாயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டனர்.

    நள்ளிரவு வெகுநேரம் ஆனதால் திருச்சி மற்றும் அரியலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இன்று அவரது இரண்டாம் கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது.

    இதற்காக விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:25 மணிக்கு வந்தடைந்தார். இன்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    ஆனால் இன்று முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நுழைவு வாயில் பகுதியிலேயே தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

    விமான நிலைய பணியாளர்கள், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் விஜய் கார் மூலம் புதுக்கோட்டை ரோடு மாத்தூர், சூரியூர் ரிங் ரோடு, துவாக்குடி டோல் கேட் வழியாக தஞ்சாவூர் பைபாஸில் நாகை வந்தடைந்தார்.

    மாநகருக்குள் நுழையாமல் புறநகர் பகுதி வழியாக செல்வதால் இன்று திட்டமிட்டபடி அவர் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×