என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதித்துறையில் மதவாதவெறி மேலோங்கி வருவது கவலையளிக்கிறது - வைகோ
- என்னுடைய தலைமையில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 11 நாட்கள் 190 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடக்கிறது.
- மஞ்சள் நிற கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனக்கு வழங்கி திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 11 நாட்கள் 190 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் நடக்கிறது.
சமத்துவ நடைபயணம் என்பதால் இந்துக்கள் வழிபடும், கோவில், கிறிஸ்தவர்கள் தேவாலயம், இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி, சீக்கியர்கள் வழிபடும் கோவில்கள், குருத்வாராக்கள் அடங்கிய சின்னங்கள் பொருந்திய சிவப்பு, மஞ்சள் நிற கொடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனக்கு வழங்கி திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்வில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மதுரையில் நடக்கும் நிறைவு விழாவில் வைரமுத்து பங்கேற்கிறார்.
இதற்கான தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் வீரர்கள் என 1000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீருடை வழங்க இருக்கிறோம். இந்த நடைபயணத்தில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதிகமாக பங்கேற்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் இல்லாத பிரச்சனைகளை இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி விட்டார்கள். சமய மோதல்களை ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்.
நீதித்துறையில் மதவாத வெறி மேலோங்கி வருவதை கண்டு கவலைப்படுகிறேன். பெரியார் சிலையை உடைப் போம் என்றும் சொன்னார்கள். எந்த இடம், நேரம் என்று அறிவித்துவிட்டு வாருங்கள். கோழைத்தனமாக இரவில் வந்து சிலையை சேதப்படுத்த கூடாது. அறிவித்துவிட்டு வாருங்கள். அங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள். நான் நிற்பேன்.
தி.மு.க. கூட்டணியில் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்போம் என்று நாங்கள் இதுவரை சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






