என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் நாளை அரசு விழாவில் உதயநிதி பங்கேற்பு - 28 சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்
    X

    நெல்லையில் நாளை அரசு விழாவில் உதயநிதி பங்கேற்பு - 28 சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்

    • நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • தென்காசியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பின்னர் சங்கரன்கோவில் செல்கிறார்.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 3 நாட்கள் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா, நிர்வாகிகள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    அதன்படி நாளை பிற்பகலில் காரில் நெல்லைக்கு வருகை தருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அதில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொள்கின்றனர்.

    அதன்பின்னர் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் நடைபெறும் கட்சியின் 28 சார்பு அணி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து இரவில் நெல்லையில் ஓய்வெடுக்கும் உதயநிதி, நாளை மறுநாள்(6-ந்தேதி) காலை தென்காசியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பின்னர் சங்கரன்கோவில் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இதில் தென்காசி மாவட்ட செயலாளர்கள் ராஜா எம்.எல்.ஏ., ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்பட திரளான நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து அன்று மாலையில் 4 மணிக்கு வள்ளியூர் சென்று அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    அதன்பின்னர் குமரி மாவட்டம் செல்கிறார். அங்கு இரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உதயநிதி நள்ளிரவில் நெல்லைக்கு வந்து ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து மறுநாள்(7-ந்தேதி) காலை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×