என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார்- தமிழக அரசு
- அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழை பெய்து உள்ளது.
- சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகரில் 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான போக்குவரத்து பராமரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22.10.2025) காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 0.30 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் நேற்று (22.10.2025) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 பேருக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 பேருக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 பேருக்கு இரவு உணவும் என மொத்தம் 3,96,400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், 150 எண்ணிக்கையில் 100 எச்.பி. மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகளும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து 299 தூர்வாரும் எந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
17.10.2025 முதல் 22.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 24 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் கட்டணமில்லாமல் 24 மணி நேரமும் தெரிவித்து தேவையான உதவிகளை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






