என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேனியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த மழை: குடியிருப்புகள், விளை நிலங்களை சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் தவிப்பு
- பாதிக்கப்பட்ட இடங்களை தங்கதமிழ்செல்வன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கூடலூரில் விடிய விடிய பெய்த மழை காரணமாக தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
கம்பம்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது முதல் பலத்த மழையாக பெய்யத் தொடங்கியது.
மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கம்பம்-சுருளிபட்டி சாலையில் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பொதுமக்கள் கடந்து செல்லாதவாறு போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி முடிவடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் இந்த மழையால் சேதம் அடைந்துள்ளன. 18-ம் கால்வாய், ஏகலூத்து ஓடைப்பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடத்தில் தங்க வைத்தனர்.
சுருளிபட்டி, முல்லைப்பெரியாற்றின் கரையையொட்டியுள்ள பகுதியில் ஆட்டு கிடை அமைத்திருந்த லட்சுமணன் என்பவர் தீபாவளி பண்டிகைக்காக 60க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். இந்த ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் அருகே தேங்காய் குடோன் அமைத்திருந்த விவசாயியின் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேவாரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும், தீபாவளி வியாபாரத்திற்காக வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களை தங்கதமிழ்செல்வன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடலூரில் விடிய விடிய பெய்த மழை காரணமாக தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கூடலூர் கள்ளர் வடக்கு தெருவில் கனமழையின்போது சாலையின் ஒரு பகுதி அரித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இங்குள்ள சிறுபுனல் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் கொண்டு 3 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. இதனால் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கு குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர்கள், ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
தேனி மாவட்டத்தில் கடந்த 1992-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள், விவசாயிகள் வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகி உள்ளன. மேலும் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரிகள் வைத்திருந்த பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.






