என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய போலீசார் மாற்றம்: தேனி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை
    X

    போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய போலீசார் மாற்றம்: தேனி மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை

    • ஆட்டோ டிரைவர் போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது.
    • 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் எஸ்.பி. நடவடிக்கை.

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுயசம்பு மற்றும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் ஒருவரை அழைத்து வந்த போலீசார் அவரை அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயசம்பு உள்ளிட்ட போலீசார் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் ஏராளமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து இன்னும் பல போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இந்த நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசாரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வாலிபர் இன்னும் தேவதானப்பட்டியில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் எதற்காக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்? அவர் மீதான கொடூர தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த தேனி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ள நிலையில், ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×