என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் - திருமாவளவன்
    X

    வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் - திருமாவளவன்

    • சாதி- மதம் பார்த்து, வேண்டியோர்- வேண்டாதோர் என பார்த்து தீர்ப்பு வழங்குகிறார்
    • சாதி-மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஒருசார்பு நிலையெடுத்துப் பேசுகிறார்.

    மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு விசிக வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின்மதுரை கிளையைச் சார்ந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தி அவரை அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் நடந்திருப்பது; குறிப்பாக, நீதிமன்றத்திலேயே பலரின் முன்னிலையில் "நீ ஒரு கோழையா" என்றும் அவர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் போக்கு கண்டனத்துக்குரியதாகும்.

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீது 14 பக்கங்களைக் கொண்ட புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார் என்பதை அறிந்தே அவர் ஆத்திரப்பட்டு இவ்வாறு நடந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.

    சாதி- மதம் பார்த்து, வேண்டியோர்- வேண்டாதோர் என பார்த்து தீர்ப்பு வழங்குகிறார் என்பதையும்; சராசரி நபர்களைப்போல சாதி-மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஒருசார்பு நிலையெடுத்துப் பேசுகிறார் என்பதையும் அந்தப. புகாரில் வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஒரு வழக்குரைருக்கு எதிராக தனது சட்டபூர்வமான அதிகாரத்தைப் பயன்படுத்த முனைவது எவ்வகையில் ஏற்புடையதாகும்? அவர், தனக்கு எதிரான புகாரைத் தானே எப்படி விசாரிக்க முடியும்?

    இதில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உடனே தலையிட்டு வழ. வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே தடுத்திட வேண்டுமென கோருகிறோம். அத்துடன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்திட ஆவன செய்ய வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×