என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திராவிட மாடல் 2.Oவில் இன்னும் பலத்திட்டங்கள் மகளிருக்கு உண்டு - உதயநிதி ஸ்டாலின்!
    X

    'திராவிட மாடல் 2.Oவில் இன்னும் பலத்திட்டங்கள் மகளிருக்கு உண்டு' - உதயநிதி ஸ்டாலின்!

    • இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி.
    • தற்போது கொண்டுவரப்பட்ட அனைத்தும் திராவிட மாடல் பார்ட் ஒன் மட்டும்தான்.

    திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

    'இந்த மகளிர் மாநாடு கூட்டத்தைப் பார்த்தால் அடுத்த 10 நாட்களுக்கு சங்கி கூட்டமும், அடிமைக் கூட்டமும் தூங்கமாட்டார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மகளிரின் குரலாக முதலமைச்சரின் குரல் உள்ளது. மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என வந்தால் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட தமிழ்நாடு முதலமைச்சர் பெயர்தான் நியாபகம் வரும்.1924ஆம் ஆண்டு போராட்டத்தின்போது பெரியார் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த போராட்டத்தை கையிலெடுத்து பெரியம்மை மணியம்மை முடித்துவைத்தார். இப்படி தொடக்கம் முதலே இந்த இயக்கத்திற்காக மகளிர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் வழங்கிவருகிறார்.

    சுயமரியாதை திருமணங்கள் செல்லும் எனும் சட்டத்தை கொண்டுவந்தார் அண்ணா. கருணாநிதிதான் முதல்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு பணி வழங்கினார். அரசு தொடக்கப்பள்ளிகளில் பெண்கள் மட்டும்தான் ஆசிரியராக இருக்கவேண்டும் எனும் திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி.


    'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதி ஆட்சியில். அதை 50 சதவிதமாக உயர்த்தியது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில். ஸ்டாலின் முதலில் போட்ட கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இந்த நான்கரை வருடத்தில் 860 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். அதுபோல காலை உணவுத்திட்டம். 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். பெண்களுக்கு மகளிர் உதவித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000. இதுபோன்று மகளிருக்கான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்துவருகிறார். இவை அனைத்தும் திராவிட மாடல் பார்ட் ஒன் மட்டும்தான். 2.0வில் மேலும் பல திட்டங்களை முதலமைச்சர் கொடுப்பார்.

    ஆனால் இந்த வளர்ச்சி பிடிக்காத மத்திய அரசு பல்வேறு வகையில் தொல்லைகளை கொடுக்கின்றனர். கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளில் பாட்சா எப்போதும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்கள் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என எத்தனை பேரை கொண்டுவந்தாலும், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். 2026 தேர்தல் மீண்டும் அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் விரட்டி அடிக்கும் தேர்தல். 7வது முறை மீண்டும் கழகம் ஆட்சி அமைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்க நீங்கள் உழைக்க வேண்டும்' என தெரிவித்தார்.

    Next Story
    ×