என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி அஞ்சலி
- டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
- தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.
கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை, அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.






