என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியா கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வந்து சேரும்- செல்வப்பெருந்தகை
- ஜார்கண்ட், மகாராஷ்டிரா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம். எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். அவர் வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் இன்று நெல்லைக்கு வருகை தந்துள்ளோம். நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்து முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம்.
கன்னியாகுமரியில் இருந்து வரும்போது நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்கு தொழில் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாங்குநேரி தொழில் பூங்கா பல்வேறு வழக்குகள் காரணமாக முடங்கிப் போய் கிடக்கிறது.
இதில் தற்போது ஒரு வழக்கு முடிக்கப்பட்டு 590 ஏக்கர் இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற வழக்குகளையும் முடித்து சுமார் 1800 ஏக்கர் இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நாங்குநேரி சுற்றுவட்டாரத்திலும், நெல்லை மாவட்டத்திலும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது அங்கு ஐ.எஸ்.ஆர்.ஓ. சார்பில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான இடத்தை தேடி வருகிறார்கள்.
ஜார்கண்ட், மகாராஷ்டிரா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழில்நுட்ப விசாரணையில் இறங்கி உள்ளனர்.
அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராம ஜெயம் கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் திணறி வருவது போலவே கே.பி.கே. ஜெயக்குமார் வழக்கும் சவாலான ஒன்றாக இருக்கிறது. விரைவில் இந்த வழக்குக்கு தீர்வு கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் 2, 3 நபர்களை சந்தேகப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். விரைவில் ஜெயக்குமார் வழக்கில் முடிவு கிடைக்கும்.
இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. எக்கு கோட்டையாக எங்களது கூட்டணி இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் சிலர் தங்களது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை எதிர்மறையாக தெரிவிக்கலாம்.
கூட்டணி என்பது சமுத்திரம் போன்றது. அதில் அலைகள் இருக்கத்தான் செய்யும். எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. இன்னும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து சேரும்.
தமிழக வெற்றிக்கழகம் என்பது நடிகர் விஜய் கட்சி. கட்சி கூட்டணி குறித்து அவர் முடிவு செய்து கொள்வார். எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
மழை காரணமாக ஓரிரு இடங்களில் மட்டும் இன்று ஆய்வு செய்ய உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி. துரை, பாளை வட்டார தலைவர் டியூக் துரைராஜ், துணை வட்டார தலைவர் ஜேம்ஸ் பீட்டர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






