என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தைப்பூசம் முன்னிட்டு தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் அறிவிப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி
    X

    தைப்பூசம் முன்னிட்டு தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் அறிவிப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

    • ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
    • ரெயில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கடந்த சில நாட்களாக பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

    ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று இயக்கிட வேண்டும் என்ற ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை மறு நாள்(சனிக்கிழமை) சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வந்தடைகிறது.

    மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரெயில் நாளை மறுநாள் நள்ளிரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்(சனிக்கிழமை) நண்பகல் 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது.

    இதேபோல் மறுமார்க்கமாக வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள்(2-ந்தேதி) காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரெயிலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×