என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தென்மேற்கு பருவமழை எதிரொலி:  3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    X

    தென்மேற்கு பருவமழை எதிரொலி: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கொங்கன் கடற்கரையை கடந்து, படிப்படியாக வலு குறைந்து, வடக்கு உள் கர்நாடகாவில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. இது மேலும் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.இதுமட்டுமல்லாமல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது.

    தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பெய்து இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிக கனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்துள்ளது.

    Next Story
    ×