என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலை உணவுத் திட்டம்: குழந்தைகள் வளம் பெற்றால் தான் நாடு வளம் பெறும்- சவுமியா சுவாமிநாதன்
- குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பில் பாடம் கற்கும்போது நன்றாக படிக்க முடியும்.
- காலை உணவுத் திட்டம் என்பது எனக்கு தெரிந்து தமிழ்நாடு தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது
தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.
இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
காலை உணவுத் திட்டத்தில் பல நன்மைகள் இருக்கிறது. சத்துணவாக கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
நம் நாட்டில் ரத்தசோகை அதிகமாக உள்ளது. டயட்டில் புரோட்டின் குறைவாக உள்ளது. காலை உணவுத் திட்டத்தில் சத்தான உணவு வகைகளை சேர்த்துள்ளார்கள்.
குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பில் பாடம் கற்கும்போது நன்றாக படிக்க முடியும். இது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கணக்கு, அறிவியலில் மதிப்பெண் அதிகம் பெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெறும் வயிற்றில் இருந்தால் வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியாது.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகள், பெண் குழந்தைகள் பள்ளியில் சேருவது அதிகரித்துள்ளது. இடைநிற்றல் குறைந்துள்ளது. பள்ளியில் காலையில் உணவு கிடைக்கும் என்று தெரிந்து குழந்தைகள் ஆர்வமாக வருகிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தால் சமைக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஏழை வீட்டில் இருந்து வந்தால் கூட இங்கு நல்ல சத்துணவு கிடைப்பதால் அவர்களுக்கும் படிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கிறது.
குழந்தைகள் வளம் பெற்றால் தான் நாடு வளம் பெறும்.
மதிய உணவுத் திட்டம் நிறைய நாடுகளில் உள்ளது. ஆனால் காலை உணவுத் திட்டம் என்பது எனக்கு தெரிந்து தமிழ்நாடு தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.
காலை உணவுத்திட்டம் ஆரம்ப பள்ளியில் இருந்து ஆரம்பித்து இன்று நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளி என்று விரிவடைந்துள்ளது.
இதே போல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்த HPV Vaccination திட்டம் 9 வயது முதல் 12 வயதுக்குள் உள்ள பெண் பிள்ளைகளுக்கு தமிழகம் முழுவதும் கொடுக்கப்போகிறார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டின் ஒரு ரோல் மாடலாக இருக்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






