search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வெற்றி தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும்- சீமான்
    X

    ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வெற்றி தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும்- சீமான்

    • சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைவர் அமைப்பினர் மனு அளித்தனர். சீமான் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சீமான் நேற்று மாலை ஈரோடு வந்தார். சீமானுக்கு ஈரோட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததால் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி குமலன்குட்டையில் அவர் தங்கி இருக்கும் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாறுவேடத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று குமலன் குட்டையில் சீமானுக்கு எதிர்ப்பை தெரிவித்து அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ஆதிதமிழர் கட்சியினர் 7 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சீமான் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கொங்கு விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 2 நிர்வாகிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எஸ்.பி வேலுமணி தலைமையில் சீமானுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு கருங்கல்பாளையத்தில் நடந்தபோது கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிடம்-தமிழ்தேசிய சித்தாந்தங்கள் மோதுகின்றன. இதில் மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர விதை ஊன்றப்படும். நாட்டில் ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க ஒரு நேர்மையாளன் ஆட்சிக்கு வந்தால் போதுமானது. ஆனால் மலை, மணல் போன்ற இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டால், அவற்றை திரும்பக் கொண்டு வர முடியாது.

    ரூ.8½ லட்சம் கோடி கடனாக பெற்ற தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை, தரமான போக்குவரத்து, குடிநீர், சாலை வசதிகளை அரசால் வழங்க முடியவில்லை. அரசு தரமாக இல்லாததால், அரசின் சேவைகள் தரமானதாக இல்லை.

    தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும்போது இதனை ரூ.2000 வழங்குவதாகச் சொல்வார்கள். கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தி, நம்மை கடன்காரர்களாக்கி விடுவார்கள். 90 சதவீத குற்றங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகின்றன. ஒருபுறம் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று சொல்லி விட்டு, மது விற்பனை ஏன் குறைந்தது என்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும். எளிதானதை செய்யாமல் சரியானதைச் செய்யுங்கள். ஜெயிக்கிற பக்கம் நிற்காமல், நிற்கிற பக்கத்தை ஜெயிக்க வையுங்கள்.

    இவர் அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது நாளாக மரப்பாலம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சூரம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×