என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு - தமிழகத்துக்கு ரூ.336 ஆக நிர்ணயம்
- நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர்.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் உள்ளனர்.
மேலும் இந்த தொழிலாளர்களுக்கு, அந்த மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 2025-26-ம் நிதியாண்டிற்கான சம்பளத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.17 கூடியிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடந்தாண்டு மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.2,900 கோடி ஒதுக்கியது. அதில் சம்பளம் போக, பொருட்கள் வாங்கியதற்கு வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிலுவை வைத்து உள்ளது.
அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கும் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் விரைவில் இந்த தொகை விடுவிக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தாண்டு தமிழகத்துக்கு முதல்கட்டமாக சம்பளத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடக்கத்தக்கது.






