என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடியரசு தின விழா - தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
- குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
- மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார்.
குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, உளவுப்பிரிவின் ரகசிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அந்தவகையில், குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. எனவே குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில அரசுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு, பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இரவு நேரத்தில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். தங்கும் விடுதிகளில் யாரேனும் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா நெருங்க நெருங்க போலீசாரின் பாதுகாப்பு கெடுபிடி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.






