என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாட்டாளி சொந்தங்களின் கனவை நிறைவேற்ற எனக்குள் புது ரத்தம் பாய்கிறது- ராமதாஸ் பரபரப்பு கடிதம்
- முன்பை விட புதிய உற்சாகத்துடன் புதிய எழுச்சியுடன் எந்த போராட்டத்தையும் மக்களுக்காக முன்னெடுக்க தயாராகவே இருக்கிறேன்.
- அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன்.
நம்மால் பொது ஆதாயம் பெற்றோர், பொதுவெளியில் அதை ஒப்புக்கொள்ள 'சுயம்' தடுத்தாலும், நான்கு அறைகளுக்குள் நம் உழைப்பில் பெற்ற பலனை குடும்பத்தாரோடு பேசிக் களிப்பதை மறுக்கத்தான் முடியுமா !
தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி, பா.ம.க. என்பதை காலம், தன்னுடைய பக்கங்களில் மறக்காமல் பதிவு செய்தே வைத்திருக்கிறது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவீத இட ஒதுக்கீடு, 10.50 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு, 3.50 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3சதவீத அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15சதவீதம், பழங்குடியினருக்கு 7.50சதவீத இட ஒதுக்கீடு; என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது; பாட்டாளிகளின் சொந்தங்களான நாம் தான்.
அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சட்ட ரீதியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், திரளான மக்கள் போராட்டத்தின் வாயிலாகவும் எனக்குப் போராடத் தெரியும், நியாயம் பெற்றுத்தரவும் முடியும். எதுவுமே எனக்குப் புதிதல்ல. பல போராட்டப் பாதைகளை உருவாக்கிய நான், புதுப்பாதையை உருவாக்கி உங்களுக்காக போராட மாட்டேனா?
தமிழ்நாட்டு அரசியலில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எப்போதும் இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் கடந்து வந்திருக்கும் 36 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 51 ஆவணங்களை வெளியிட்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவைகள் வெறும் ஆவணங்கள் அல்ல, மக்கள் நலனுக்கான பாதுகாப்பு அரண்கள், என்றே அறிஞர் பெருமக்கள் எப்போதுமே சொல்வார்கள்.
தமிழ்நாட்டில் மது விலக்குக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியதோடு நிறுத்தாமல், சட்டப் போராட்டமும் நடத்தி 3321 மதுக்கடைகளை மூடியது-மூட வைத்தது பா.ம.க. தான்.
இதுவரை நாம் கடந்து வந்த 36 ஆண்டுகளை விட, இந்த 37-ஆம் ஆண்டு பல புதிய அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
முன்பை விட புதிய உற்சாகத்துடன் புதிய எழுச்சியுடன் எந்த போராட்டத்தையும் மக்களுக்காக முன்னெடுக்க தயாராகவே இருக்கிறேன்.
இனி நமக்கெல்லாம் பொற்காலம்தான். நீங்கள் குக்கிராமங்களில் இருக்கிறீர்களோ, நகரங்கள்- தலைநகரங்களில் இருக்கிறீர்களோ; உங்கள் வீடுகள், அலுவலக முகப்புகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளை ஏற்றுங்கள். ஏழை மக்களுக்கு சட்ட உதவியும், மருத்துவ உதவியும், கல்வி உதவியும் செய்வதில் முதன்மையான நபர்களாக இருங்கள்.
எனக்கு உங்களைப் பற்றிய கவலைதான் எப்போதும். ஆரோக்கியத்தை விட்டு விடாதீர்கள். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக நாம் முன்னெடுத்த போராட்டங்கள் லட்சத்தை தாண்டும்.
என்னைப் போன்று ஆரோக்கியமாக வாழுங்கள், உழைப்பை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள், உங்களின் உற்சாகக்குரலே என்னை புதுப்பிக்கிறது; என்னை உற்சாகப்படுத்துகிறது; இன்னும் போராடச் சொல்கிறது; எதிரே எத்தனைபேர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல் மோதிப் பார்க்க சொல்கிறது; எதிர்க்க இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது; இத்தனை தெம்பும், தினவும் பாட்டாளி சொந்தங்களின் அரவணைப்புதான் எனக்கு கொடுக்கிறது.
பாட்டாளி சொந்தங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருக்கிறது.
அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






