என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாட்டாளி படைகளே மாமல்லபுரம் நோக்கி அணிவகுக்க தயாராகுங்கள்- ராமதாஸ் அழைப்பு
- தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்ற போதிலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம் ஆகும். அந்த வழக்கத்தில் இருந்து விலகாமல் இந்த மாநாடும் அதே நோக்கத்திற்காகத் தான் நடத்தப்படுகிறது. மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; 69சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும், வன்னியர்களுக்கு மக்கள் தொகை, சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு; அதற்கு வசதியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தேசிய, மாநில அளவில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறை கூடாது! அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்க வேண்டும். தனியார் துறை, உயர்நீதித்துறையில் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்!
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அனைத்து சமூகங்களின் வீழ்ச்சிக்கும், குற்றங்கள் பெருகவும் காரணமாக இருக்கும் மது, கஞ்சாவை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
கல்வி, தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு போன்றவற்றில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் சமய, சமுதாய நல்லிணக்கத்தை நிலை நிறுத்தவும், வெறுப்புக் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நான் விடுத்த அழைப்புகளை ஏற்று மாமல்லபுரத்தை நோக்கி அணிவகுக்க நீங்கள் அனைவரும் தயாராகி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனாலும், மாநாட்டில் பங்கேற்பது எப்படி உனது கடமையோ, அதேபோல், மாநாட்டுக்கு வரும்படி அழைக்க வேண்டியது எனது கடமை. ஆகவே, மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன். 'பாட்டாளிப் படைகளே' அணிவகுக்கத் தயாராகுங்கள் மாமல்லபுரம் நோக்கி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






