என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவுடன் ராமதாஸ் ஆலோசனை: அன்புமணி மீது நடவடிக்கை பாயுமா?
- அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
- 7 நாட்களுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
அதாவது கட்சிக்கும் டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டது. டாக்டர் ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டு கேட்பு கருவி வைத்தது, அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது, மக்கள் தொலைக்காட்சியை கைப்பற்றியது என 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அப்படி பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்தக் குழுவுக்கு டாக்டர் ராமதாஸ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் மீதான புகார்கள் குறித்து முடிவெடுக்க இன்று தைலாபுரத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் எம்.எல்.ஏ.அருள், வந்தவாசி முன்னாள் எம்.பி.துரை, தர்மபுரி நெடுங்கிறன், தலைமை அரசியல் ஆலோசகர் குழு உறுப்பினர் சேலம் சதாசிவம், மாநில மகளிர் அணி செயலாளர் தஞ்சாவூர் பானுமதி, ஆடுதுறை ம.க ஸ்டாலின், திருமலை குமாரசாமி ஆகியோர் இந்த குழுவில் பல ஆண்டுகளாகவே இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் டாக்டர் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு அதற்கான அறிக்கையை 7 நாட்களுக்குள் டாக்டர் ராமதாசிடம் தெரிவிப்பார்கள். 7 நாட்களுக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பும் நோட்டீசுக்கு அன்புமணி பதில் அளிக்காவிட்டால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயலாம் என பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.






