என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குமரியை குளிர்வித்த மழை- கோழிப்போர்விளையில் 195 மில்லி மீட்டர் பதிவு
- குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்தநிலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் நேற்று மாலையில் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது.
கனமழையின் காரணமாக பீச்ரோடு, இருளப்பபுரம், வைத்தியநாதபுரம், வடலிவிளை, புன்னைநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் நள்ளிரவு அதை சரி செய்து மின் இணைப்பை வழங்கினர்.
கோழிப்போர்விளை பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 195 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
குளச்சல், இரணியல், அடையாமடை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை அணைப்பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, களியல், குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30 அடியாக இருந்தது. அணைக்கு 793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.70 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 125.4, பெருஞ்சாணி 37.6, சிற்றாறு 1-60.2, சிற்றாறு 2-56.6, கொட்டாரம் 2.2, மயிலாடி 1.2, நாகர்கோவில் 44.6, கன்னிமார் 7.6, ஆரல்வாய்மொழி 3.6, பூதப்பாண்டி 5.2, முக்கடல் 18, பாலமோர் 38.2, தக்கலை 49, குளச்சல் 14, இரணியல் 74, அடையாமடை 128.4, குருந்தன்கோடு 23, கோழிப்போர்விளை-195, மாம்பழத்துறையாறு 57, ஆணைக்கிடங்கு 55.6, களியல் 46.4, குழித்துறை 32.4, சுருளோடு 61.4, திற்பரப்பு 5.4, முள்ளங்கினாவிளை 16.6.






