என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - கூடலூரில் இன்று பொங்கல் விழாவில் பங்கேற்பு
    X

    தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - கூடலூரில் இன்று பொங்கல் விழாவில் பங்கேற்பு

    • கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ராகுல் காந்தி கூடலூர் வருகிறார்.
    • ராகுல்காந்தி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    ஊட்டி:

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இன்று நீலகிரி மாவட்டம் வருகிறார். கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாலை 3 மணிக்கு அவர் கூடலூர் வருகிறார்.

    தனி ஹெலிகாப்டரில் வரும் அவர் கூடலூர் தேவர்சோலையில் உள்ள மைதானத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதேபோல அங்குள்ள சுங்கம்பகுதியிலும் காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து ராகுல்காந்தி கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரசார் மட்டுமல்லாது ஆ.ராசா எம்.பி., பொன்ஜெயசீலன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு பள்ளி மைதானம் முதல் செயிண்ட் தாமஸ் பள்ளி மைதானம் வரை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். கூடலூர் நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி எம்.பி., மீண்டும் மைசூர் புறப்பட்டுச் செல்கிறார்.

    ராகுல் வருகையால் நீலகிரி மாவட்ட காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பு தலைவர் கிரீஸ் சோடங்கர், செயலாளர் சூரஜ் ஹெக்டே மற்றும் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர்.

    Next Story
    ×