என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
- 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
ஊட்டி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வருகிற 13-ந் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக விழா நடைபெறும் பள்ளிக்கு சென்று பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டு செல்கிறார்.
கூடலூருக்கு வருகை தரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல் விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.






