என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் பொதுமக்கள் ஆர்வம்
- தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
- கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,300 வரை கடன் வழங்கப்படுகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ நெருங்கி வரும் நேரங்களில் அரசியல் கட்சியினர் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.
அதில் முக்கியமான ஒன்றுதான் விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி. இது பலருக்கும் நன்மைதான் என்றாலும், தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சியினர் விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதி கொடுப்பார்களா? என எதிர்பார்க்கும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
பொதுவாக தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு சங்க வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் தங்க நகை அடமானத்தின் பேரில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.8 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.6,300 வரை கடன் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த முறையும் அரசியல் கட்சியினர் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என மக்கள் உஷாராகிவிட்டனர்.
இதனால் நகைகளை எடுத்துக்கொண்டு கூட்டுறவு வங்கிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் பேருக்கு, ரூ.25 ஆயிரம் கோடி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட நகை அடமானக் கடன் தொகையை விட அதிகமாகும்.
இது குறித்து ஓய்வு பெற்ற கூட்டுறவுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் இதுவரை நகை அடமானக்கடன் வாங்காதவர்களும் 3 பவுன் முதல் 5 பவுன் வரை நகையை அடமானமாக வைத்து கடன்பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இலக்கை விட நகைக்கு அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதேபோல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதால் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் தங்க நகைகளை விவசாய கடன் என்று கூறி பொதுமக்கள் விவசாய நிலத்திற்கான படங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் அடமானம் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் நம்பிக்கை பலிக்குமா? அல்லது பாழாய் போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






