என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
    X

    கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

    • பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.
    • இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    கோவில் மகா மண்டபத்தில் உள்ள தாமரை வடிவிலான நவக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், கோவிலில் வெளிப்புறத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், ராஜேந்திர சோழனின் செப்பேடு பிரதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    பின்னர் மூலவர் சன்னதிக்கு சென்ற அவர் பெருவுடையாரை தரிசனம் செய்தார்.

    அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.

    பாராயணம் ஓதும் நிகழ்வில் கரங்களை கூப்பியபடி பிரதமர் மோடி கேட்டார்.

    பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது.

    ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார்.

    சிவபுராணத்தின் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சிவபெருமான போற்றி பாடலை இசைஞானி இளையராஜா பாடினார்.

    இதையடுத்து முப்பெரும் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.

    இதன் பின்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சாகித்ய அகாடமியின் திருமுறை இசை புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

    இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    Next Story
    ×