என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி பங்கேற்கும் முப்பெரும் விழா - பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கும் பணி தீவிரம்
- ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
- அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
இங்கு ஆண்டுதோறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆடி மாத திருவாதிரை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ஆடி திருவாதிரை விழா வருகிற 23ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.
இதில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அங்கே சுமார் 3 மணி நேரம் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். இந்த விழாவானது ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை அவர் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்து சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.
விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மேலும் தொல்லியல் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட உள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன் பின்னர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டுக்களிக்கிறார்.
இளையராஜா, சமீபத்தில் லண்டனுக்கு சென்று திருவாசகம் சிம்பொனி இசை அமைத்து சாதனை நிகழ்த்தினார். அந்த திருவாசகம் சிம்பொனி இசையை கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜா நடத்துகிறார். இந்த இசையை பிரதமர் மோடி 20 நிமிடங்கள் அமர்ந்திருந்து கேட்டு ரசிக்கிறார். மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யட்டுள்ளது கோவிலுக்குள் அவர் நுழையும்போது 50 ஓதுவார்கள் மூலம் திருவாசகம் படிப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 38 ஆதீனங்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பத்தாயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதற்காக கோவில் அருகாமையில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
விழாவின் தொடக்க நாளான 23-ந் தேதி முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. ஆனால் அவரது வருகை உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் விழா கோலம் பூண்டு வருகிறது.






