என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
- அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர்.
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






