என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தலைமறைவான மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.






