என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதி பணிகள் நடக்கிறது- அமைச்சர் தகவல்
- கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.
- 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சென்னை:
சட்டசபையில் இன்று வினா-விடை நேரத்தின் போது வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது:-
காடந்தேத்தியில் ஆதீன மலையார் கோவிலுக்கு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்குண்டான போதிய இடவசதி இல்லை. இருப்பினும், அந்த கோவிலுக்கு சொந்தமான இடத்திலோ, மாவட்டத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சொந்தமான இடங்களிலோ ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குண்டான முயற்சியை துறை மேற்கொள்ளும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது சுமார் 70 சதவீதம் பக்தர்களின் வருகை கூடுதலாகி இருக்கின்றது.
முதலமைச்சர், அந்த மாவட்டத்தின் அமைச்சர் வேலுவையும் அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை சபாநாயகர் பிச்சாண்டியையும், துறையின் அமைச்சரான என்னையும் 3 பேர் குழுவாக நியமித்து தினந்தோறும் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதன்படியே பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.
அதேபோல பொதுப்பணித்துறை சார்பில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேலும், கிரிவலப் பாதையில் சுமார் 12 இடங்களில் கழிப்பிட வசதிகள் பொதுப்பணித்துறை அமைச்சரின் முயற்சியால் சி.எஸ்.ஆர். நிதியுதவி மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட முதலமைச்சர், திருவண்ணாமலை கோவிலில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்ற வண்ணம் 7½ கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை தொடங்கி வைத்து இன்றைக்கு கோபுரங்கள் மின்னொளி பெற்று பிரகாசமாக இருக்கின்றது.
அதோடு மட்டுமல்ல கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்ற போது நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு சுமார் ரூ.4.50 கோடி செலவில் கியூ வரிசை காம்ப்ளக்ஸ் ஏற்படுத்துகின்ற பணியும் தற்போது நடைபெற்று வருகின்றது.
போர்க்கால அடிப்படையில் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக, ஒரு துறையாக இந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்திட்ட வரைவின் வாயிலாக கோவிலின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






