என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனியில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து - அமைச்சர் தகவல்
- பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
- சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டது போல், பங்குனி உத்திரத்திற்கு இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவித்தார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி கோவிலில் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது பங்குனி உற்சவத்தையொட்டி எங்கள் பகுதியில் இருந்து நிறைய பேர் சாலை மார்க்கமாக செல்கிறார்கள். ஆனால் சென்னிமலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் உள்ளனர்.
இதை அமைச்சர் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் இன்றும் நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தாலும் துறை செயலாளர் மற்றும் கலெக்டர் இடம் கலந்து பேசி இரண்டு நாட்கள் அங்கு சாலை பணிகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.