என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - டாக்டர் கைது
    X

    குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - டாக்டர் கைது

    • அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    • என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.

    அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன்.

    அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை.

    என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து அச்சத்துடன் வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.

    பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். இதற்கு பிறகு அவரும், எனது உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர்.

    என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களையும் சேகரித்தனர். இதில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர் கார்த்திகேயனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிசியோதெரபிஸ்ட் டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரியை நடத்தி வரும் நிலையில்தான் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த கொடுங்கையூர் மாணவியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நோயாளி ஒருவருக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று ஏமாற்றி மாணவியை தனது காரில் அழைத்துச் சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவியை அழைத்துச் சென்ற போதுதான் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதற்காக கோககோலா குளிர்பானத்தை வாங்கி அதில் மயக்க மருந்தை கலந்து தயாராக வைத்திருந்து உள்ளார்.

    இதைதான் மாணவிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கற்பழித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிசியோதெரபிஸ்ட் டாக்டரான கார்த்திகேயன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு உள்ளது. பி.என்.எஸ். 123-குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளை சாப்பிட கொடுத்தல், பி.என்.எஸ். 63-கற்பழிப்பு, பி.என்.எஸ். 64-கற்பழிப்புக்கான தண்டனையை உறுதி செய்யும் பிரிவு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் டாக்டர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த பாலியல் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×