என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சர்வதேச அந்தஸ்து பெறும் மதுரை விமான நிலையம் - இபிஎஸ் வரவேற்பு!
    X

    சர்வதேச அந்தஸ்து பெறும் மதுரை விமான நிலையம் - இபிஎஸ் வரவேற்பு!

    • வெளிநாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக மதுரைக்குத் தங்கள் சேவைகளை வழங்க வழிவகை ஏற்படும்.
    • நாளை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பழமையான விமான நிலையங்களில் ஒன்றான மதுரை விமான நிலையத்திற்குச் சர்வதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது தென்தமிழ்நாடு மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

    சர்வதேச அந்தஸ்து கிடைப்பதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் நேரடியாக மதுரைக்கு வர வசதி ஏற்படும். மேலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக மதுரைக்குத் தங்கள் சேவைகளை வழங்க வழிவகை ஏற்படும், இது சர்வதேச விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும்.

    இந்நிலையில் மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,

    "மதுரை விமான நிலையத்திற்கு "சர்வதேச விமான நிலையம்" அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முடிவை அதிமுக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் கலாச்சார மையமாகவும், தென் தமிழ்நாட்டிற்கான முக்கிய இணைப்பாக விளங்கும் மதுரை மண்ணின் மக்கள் விடுத்த நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை கொடுத்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தென் தமிழகத்தின் சுற்றுலா, வணிக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெரும் பங்காற்றும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இது மதுரை மற்றும் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 11) தமிழ்நாடு வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×