என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    துணை நிற்பேன்! கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசிய விஜய்
    X

    துணை நிற்பேன்! கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசிய விஜய்

    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.
    • பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்ப திவு செய்துள்ளனர்.

    இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.

    பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

    கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் அம்மா, தங்கை ஹர்ஷினியுடன் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்" என தனுஷ்குமார் தாயாரிடம் பேசினார்.

    தனுஷ் சகோதரியிடம் பேசுகையில், "ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எப்போதும் உங்களுக்காக துணை நிற்பேன். மேலும் நேரில் உங்களை நிச்சயம் சந்திப்பேன்" என விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

    தனுஷ்குமார் உறவினர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்ததை தனுஷ்குமாரின் உறவினர் தமிழரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பலியானோர் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    Next Story
    ×