என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேசாமல் இருப்பதுதான் விஜய்க்கு நல்லது" - தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்!
- தவெகவில் திராவிடம் உள்ளது.
- தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும்.
திமுக, மதிமுக, அதிமுக என தமிழ்நாட்டின் மூத்த கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் இன்று தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"ஜெயலலிதா மறைந்தபின் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். என்னைப் பார்த்து நான் உங்கள் ரசிகர் என விஜய் கூறினார். உடனே மெய்சிலிர்த்து போனேன். தொலைக்காட்சி தொடர் ஒன்றில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். அதிலிருந்து என்னை வசைபாடினார்கள். இதனால் மனமுடைந்துபோனேன்.
திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்த பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். தவெகவில் இணைந்துள்ளேன். உற்சாக மனநிலையில் உள்ளேன்." என தெரிவித்தார்.
விஜய்யுடன் நாஞ்சில் சம்பத்
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"நான் இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியிருக்கிறார். தவெகவில் திராவிடம் உள்ளது. பெயரில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான். திராவிட இயக்கத்தின் நீட்சியாகவே விஜய்யை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்கும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.
இளைஞர்களை வைத்துக்கொண்டு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு விஜய்யிடம் திட்டம் இருக்கிறது என நம்புகிறேன். திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக ஏன் பேசவில்லை என்பது குறித்து விஜய்யிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அதுகுறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது." என தெரிவித்தார்.






