என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
- சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
- மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.
குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பில் இராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள நிலப் பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
எனவே ஒன்றிய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






