என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்- 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
- பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- குடிநீர் வசதிக்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாகவும், சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று காலையில் இருந்தே திருச்செந்தூரில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் வந்த வாகனங்கள் நிறுத்த வசதிக்காக போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே தற்காலிக வாகன நிறுத்தம் அமைத்திருந்தனர். மேலும் குடிநீர் வசதிக்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.






