என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளை கிராம சபை கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசுகிறார் - ககன்தீப் சிங் பேடி
- வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.
- பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும்.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும்.
குறிப்பாக, கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதில் முதன்மையாக கருதப்படும் மூன்று தேவைகளை தேர்வு செய்வது அதனை நிவர்த்தி செய்வதுதான் அரசின் நோக்கம். நம்ம ஊரு, நம்ம அரசு திட்டத்தின் கீழ் இந்த மூன்று தேவைகளை குறைவான கால கட்டத்தில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உதாரணத்திற்கு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு, குப்பை உள்ளிட்டவை ஆகும். மேலும், கிராமங்களில் இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதி பெயர்கள் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் பொது உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை நீக்கி வேறு பெயர்களை சூட்டுவது குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் விவாதிக்கப்படும்.
குறிப்பாக, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணாங்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பல்வேறு பெயர்கள் மாற்றப்பட வேண்டியவை தொடர்பாக கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள். அவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். இதனை பரிசீலனை செய்து அரசு முடிவு எடுக்கும்.
கிராமங்களில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களை கிராம சபை மூலமாக தேர்வு செய்து தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக நலிவுநிலை குறைப்பு நிதி கொடுத்து அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னுரிமை பட்டியல் தயார் செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் இதற்கென தயாரிக்கப்பட்ட நலிவுநிலை குறைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும். கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத்தின் நிதி, வரவு-செலவு மற்றும் தணிக்கை அறிக்கைகள் விவாதிக்கப்படும். தூய்மை பாரத இயக்கம் திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்தும் விவா திக்கப்படும். கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும் தேவைகளை கோரிப் பெறுவதற்காகவும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. ஒரு ஆண்டில் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.






