என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பயணம்
- ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
- பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பயணம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948-ம் ஆண்டு டிசம்பர் 21-ல் ஈரோட்டில் பிறந்தார். அவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
பெரியாரின் பேரன், EVK சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். மேலும், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 1984-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
முந்தைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரி இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்தனர். இப்பதவியில் (1996-2001) ஆண்டு வரை மிகவும் திறம்பட செயல்பட்டார்.
2004 பாராளுமன்ற தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் பதவியேற்று கொண்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக (2014-2017) இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
2023-ம் ஆண்டு அவரது மூத்த மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததையடுத்து பின் அவர் விட்டு சென்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டசபை வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.






