என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு
- ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகராட்சி பகுதியை முழுவதும் உள்ளடக்கியதாகும்.
- 60 வார்டுகளில் 33 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகராட்சி பகுதியை முழுவதும் உள்ளடக்கியதாகும்.
ஈரோடு மாநகராட்சிகளில் 60 வார்டுகளில் 33 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி மிக முக்கிய பகுதியாக உள்ளது. இந்த வழியாக தான் சேலம், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருவதால் இங்கு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி தற்காலிகமாக பி.பி.அக்ரஹாரம் பகுதி, சம்பத் நகர், எல்லை மாரியம்மன் கோவில், மூல பட்டறை நால்ரோடு, கொல்லம்பாளையம், வீரப்பம்பாளையம், சூளை, கருங்கல்பாளையம் காந்தி சிலை உள்பட 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு துணை ராணுவ படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை இந்த பணியை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.






