என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து இ.பி.எஸ். சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள் - மு.க.ஸ்டாலின்
    X

    நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து இ.பி.எஸ். சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள் - மு.க.ஸ்டாலின்

    • டெல்டா மாவட்ட விவசாயிகளையும் பொதுமக்களையும் சந்தித்து அவர்களுக்குத் துணை நின்றேன்.
    • பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள்

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "புயல் சின்னமும் பெருமழையும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களை அச்சுறுத்துகிற நிலையில், வடகிழக்குப் பருவகால இயற்கையின் தன்மையை உணர்ந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உங்களில் ஒருவனான நான் -உங்களால் முதலமைச்சரான நான், எங்கெங்கு முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிகாரிகளைப் பணித்திருக்கிறேன்.

    தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரில் தொடங்கி, அத்தனை அமைச்சர்களும் களத்தில் மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தோழமை இயக்கத்தினர் என அனைவரும் முழு வீச்சுடன் செயலாற்றி வருகிறார்கள். வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது, பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொள்வது, நெல் சாகுபடி -கொள்முதல் ஆகியவை தடையின்றி நடைபெறுவது உள்ளிட்ட அனைத்திலும் நம் திராவிட மாடல் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

    இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம். 1952-ஆம் ஆண்டு கீழத்தஞ்சை (நாகை) மாவட்டத்தில் புயல் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டபோது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அமைத்த குழுவுக்குத் தலைமையேற்ற நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் புயல் நிவாரண நிதி திரட்டி, கீழத்தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கு உடை, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலேயே போட்டியிடாத காலம். 1978-ஆம் ஆண்டு கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது அதே நாகை, திருவாரூர் பகுதிகளில் ஏற்பட்ட புயல் - வெள்ளப் பாதிப்பின்போதும் தலைவர் கலைஞரின் கட்டளையை ஏற்று கழக முன்னோடிகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

    2018-ஆம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க.வின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான தி.மு.க.தான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நானும் டெல்டா மாவட்ட விவசாயிகளையும் பொதுமக்களையும் சந்தித்து அவர்களுக்குத் துணை நின்றேன்.

    இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார். நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை திராவிட மாடல் அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×