என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி
    X

    2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி

    • 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி புரிந்துள்ளது.
    • கடந்த தேர்தலில் பொய் பிரசாரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்ட உள்ளேன்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (7-ந்தேதி) கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    இதற்கான பிரசார பாடல் மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது.

    புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற வாசகங்களுடன் இரட்டை இலை சின்னத்தின் பின்னணியில் ஒற்றை கையை உயர்த்தி பிடிக்கும் வகையில் இலச்சினை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது ஒளிபரப்ப உள்ள வீடியோ பாடலும் வெளியிடப்பட்டது.

    இவன் சரித்திரம் போற்றும் சாமானியன் என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்த பாடல் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு முதலமைச்சர் என்னைப் பற்றி சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் இப்போதுதான் மக்களை சந்தித்து பேசுகிறார் என்று முதலமைச்சர் என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்.

    நான் எப்போதும் இயல்பாக மக்களோடு இருப்பவன். நான் எப்போதும் மக்களை சந்தித்துக் கொண்டு, அவர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன். அதனால் தான் மக்களின் குறைகளை அறிந்து அவர்களின் குரலாக நானும் அ.தி.மு.க.வும் ஒலித்து வருகிறோம்.

    அதனை அடுத்து மிக முக்கியமான அத்தியாயம்தான் இந்த எழுச்சி பயணம். என்னது? தேர்தல் பிரசாரம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம். தேர்தல் பிரசாரம்தான். ஆனால் இந்த பயணத்துக்கு ஒரு மிகப்பெரிய நோக்கம், தேவை இருக்கின்றது.

    இந்த பயணத்தின் நோக்கம் விடியா ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தி அவர்களிடம் மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பது. இந்த பயணம் எதற்காக என்றால் இந்த ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கிறது.

    அ.தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். தி.மு.க.வை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை தந்தார். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி புரிந்துள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று பெயர் பெறுகின்ற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்தோம்.

    இந்த பயணத்தின் நோக்கம் கடந்த 50 மாத தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கொடுமைகள் அத்தனையையும் பட்டியலிட்டு மக்களிடம் எடுத்து சொல்லி இந்த ஆட்சியை அகற்றுவதுதான் எங்களது நோக்கம், லட்சியம்.

    இந்த தேர்தல் சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் பேராதரவை அ.தி.மு.க. பெறும். 2026 சட்டசபை தேர்தலில் வென்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.

    வருகிற 7-ந்தேதி எனது தேர்தல் சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். மக்களை நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி மக்கள் மனதிலே பதிய வைக்க உள்ளேன்.

    இதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி அ.தி.மு.க. 2026-ல் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதற்கு இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன்.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூற இருக்கிறேன்.

    கடந்த தேர்தலில் பொய் பிரசாரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்ட உள்ளேன். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளும்போது அந்தந்த மாவட்டங்களின் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் எடுத்து கூறி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    Next Story
    ×