என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது: ஆழியாறு சோதனைச்சாவடியில் தீவிர சோதனை
- சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
- சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய மலைப்பிரதேசங்களில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன்படி ஊட்டி, கொடைக்கானலை சேர்ந்தவர்களை தவிர்த்து வெளியூர், பிற மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் வருவோர் இ-பாஸ் அனுமதியுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான மலைப்பிரதேசமான வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்பதை ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி மற்றும் சோலையாறு அணை இடதுகரை மழுக்குப்பாறை வழி சோதனைச்சாவடியிலும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை வருவதற்கு இ-பாஸ் பெற https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி சோதனைச்சாவடிகளில் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வால்பாறை தாலுகாவில் உள்ள முகவரிகளை கொண்ட அனைத்து வாகனங்கள் அதே இணையதளத்திற்கு சென்று உள்ளூர் பாஸ் ஒரு முறை மட்டும் பதிவு செய்து பெற்றுகொண்டால் போதுமானதாகும். அரசு பஸ்களில் வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை. எனவே, வால்பாறை தவிர்த்து வெளியூர் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுதான் வர வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






