என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் பங்கேற்ற விழாவில் பங்கேற்கக்கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது: ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
    X

    விஜய் பங்கேற்ற விழாவில் பங்கேற்கக்கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது: ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

    • அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
    • திருமாவளவன் இந்த தகவலை தொடர்ந்து மறுத்து வந்தார். இறுதியில் விழாவில் பங்கேற்காததற்கு விளக்கம் அளித்தார்.

    "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொள்வது உறுதியானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை. முதலில் தொல். திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார்.

    தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையில் மூலம் விளக்கியிருந்தார்.

    இருந்தபோதிலும் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது கூட்டணி கட்சி நெருக்கடியால் அவர் பங்கேற்வில்லை எனக் கூறினார்.

    விஜயின் இந்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திருமாவளவன் கூட அழுத்தம் கொடுத்தால் இணங்கும் அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை எனக் கூறியிருந்தார்.

    கடந்த 6-ந்தேதி நடைபெற்ற புத்த வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் நேரடியாக தி.மு.க. அரசை தாக்கி பேசினார். விழாவில் அரசியல் பேச வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆதவ் அர்ஜூனா அதையும் மீறி பேசியுள்ளார். இதனால் கட்சியில் இருந்து ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். இருந்தபோதிலும் ஆதவ் அர்ஜூனா தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆதவ் அர்ஜூனா பேட்டியளித்தார். அப்போது "விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூட்டணி உருவாகும் என்பதை புதிதாக வந்தவர்கள் கூட முதிர்ச்சியற்ற தன்மை என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

    திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவை சந்திக்கும்போது விழாவிற்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார். நீங்கள் சென்றால் கூட்டணியில் பிரச்சனையாகிவிடும் என அவரது கருத்தை கூறினார். விழாவில் பங்கேற்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை என அமைச்சர் எ.வ. வேலு திருமாவளவனிடம் பேசினார். திமுக-வின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. முதிர்ச்சியற்றது" ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.

    Next Story
    ×